தீபச்செல்வன்
பெருநிலத்தின் கடலில் கொட்டிய குருதி
உப்பு வயல்களில் தேங்கிக் கிடக்கிறது
வெடிகள் அதிர்ந்து புகை எழும்பி
உயிர் கரைந்த நாட்களில்
வேழினியின் தந்தை
உப்பு வயல்களில் உயிர் கொட்டி விறைந்திருந்தார்
வேழியின் கண்களில் நீங்காதிருக்கின்றன
உப்பு வயல்களில் நகர்ந்த
வியர்வைகளும் குருதிகளும்.
நிலத்திற்காய் கொட்டிய குருதி
காயாமல் பிசுபிசுக்கிறது
வேழியின் கண்களை நிலம் கொள்ளையிடும்
கைகள் குத்துகின்றன
அன்றெமது நிலத்திற்காய்
இதே தெருவில் பற்றைகளினூடே
வெடிகளை சுமந்து சென்றவர்கள் நகரும் பொழுது
குருதி பெருக்கெடுத்துக் கொட்டியது.
இன்றெம் நிலத்தில்
மிகக் கொடும் கைகள் விளைந்திருக்கின்றன
நிலம் அள்ளும் கைகளின் நகங்கள்
உப்பு வயல் கடல் நிலத்தில்
வளர்ந்து கண்களையும் முகத்தையும் குத்துகின்றன.
அன்றெமது கொடி பறந்த தடிகளில்
நிலத்துயரம் பறக்கிறது
வெடி சுமந்து சென்றவரின்
தாங்கியில் வேறுகதைகள் எழுதப்பட்டுள்ளன
உப்பு வயல்களில் முளைத்து
இன்னும் உயிரோ கிடந்து
துடிக்கிற வார்த்தைகள் பிடுங்கப்படுகிறது.
நிலம் அள்ளித் தின்ற கைகள்
எப்பொழுதும் தெருவால் செல்பவர்களை மிரட்டுகின்றன
கனவின் குருதி வயல்களில் உயிர்கள் மணக்கின்றன
உப்பு வயல்களில் மீண்டும் மீண்டும்
முளைக்கின்றன வெடி சுமந்தவர்களின் முகங்கள்.
இந்தக் கடல் நிலம் அடிமையாக்கப்படதை
வேழினி தாங்க முடியாது துடிக்கிறாள்
எப்பொழுதும் காதுகளை நிரப்பியபடியிருக்கும்
குருதிக் கடல் நிலத்தின் பெரும் உப்புக்காற்று
வெடி சுமந்தவர்களின் கதைகளை கூவியபடியிருக்கிறது.
2011
______________________
நன்றி : ஆனந்தவிகடன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக