பீரங்கிகளும் துப்பாக்கிகளும் விமானங்களும்
துப்பாக்கிகள் என்ன செய்யப்போகின்றன?
ஒன்றில் அவை சோர்வடைந்து சரிந்து போகும்
அல்லது கூர்மையடைந்து முகங்களைக் கிழிக்கும்
நீதான் புரட்சியை ஆயுதமாக்குபடி நிர்பந்திக்கறாய்
எதிர்ப்பை கிளப்பும் களத்தை திறக்கிறாய்
புரட்சியையும் எதிர்ப்பையும் எப்படிக் கொல்வது?
சனங்களை அடக்கும்பொழுது
குருதியில் புரட்சி பெருக்கெடுக்கிறது
வாழ்வின் இனிய பாடலை
நாம் பாடிக் கொண்டிருக்கும் நிலத்தைவிட்டு
அந்நியப்படைகளே
எப்பொழுது வெளியேறிச் செல்வீர்கள்?
வாழ்வை மூடியிருக்கும்
உங்கள் அதிகார நிழலை
எப்பொழுது விலக்கிக் கொள்வீர்கள்?
முதியவர்கள் சோர்வடைந்து
முடங்கியபடி காலத்தை கடக்கும் பொழுது
சிறுவர்கள் வளர்ந்து
நீங்கள் கொண்டு வந்த துப்பாக்கிகளையும்
பீரங்கிகளையும் முறித்துப் போடுவார்கள்
இந்தத் நிலத்தின் எல்லாத் தலைமுறைகளும்
நீயே யுத்தத்தை கையளிக்கிறாய்
எங்கள் சிறுவர்கள்மீது
துப்பாக்கிகளை நீட்டும்பொழுதில்
நடுநடுங்கித் துடிப்பார்கள் மூதாதையர்கள்
எனினும் சிறுவர்களுக்கு எதிராக
பீரங்கியை இந்நிலத்திற்கு
நீங்கள் கொண்டு வரும்பொழுது
கிளர்ந் தெழும் எங்கள் சிறுவர்கள்
முறித்துப் போடுவார்கள் அதை.
தீபச்செல்வன்
நன்றி : புது எழுத்து மார்கழி 2011
2 கருத்துகள்:
வாழ்வின் பாடலை
நாம் பாடிக் கொண்டிருக்கும் நிலத்தைவிட்டு
அந்நியப்படைகளே!
எப்பொழுது வெளியேறிச் செல்வீர்கள்?
வாழ்வை மூடியிருக்கும்
உங்கள் அதிகார நிழலை
எப்பொழுது விலக்கிக் கொள்வீர்கள்?
இந்த வரிகள் முக்கியமானவை. கவித்துவம் பொதிந்தவை.
புரட்சியையும் எதிர்ப்பையும் கொல்ல முடியாது
சனங்களை அடக்கும்பொழுது
புரட்சி குருதியில் பெருக்கெடுக்கிறது.
உணரப்பட வேண்டிய யதார்த்தத்தின் வரிகள்.
கருத்துரையிடுக