நான் எதுவரை நிலம் பற்றியே பாடிக் கொண்டிருப்பேன்?
நிலத்திலிருந்து பிடுங்கி எறியப்படும்வரை
குழந்தைகளின் கைகளில் நிலத்தை
உறுதியாய் பிடித்து வைத்திருக்கும்வரை
நான் நிலம் பற்றி பாடிக் கொண்டிருப்பேன்
பறவைகளின் காட்டில் குழந்தைகள்
நிலத்தின் வார்த்தைகளை ஒளித்து வைத்திருந்தனர்.
இன்று அந்த நிலத்தில் பறவைகள்
துடித்து விழ அந்நியக் குடிகள்
நிலமூன்றிக் கொண்டன
வெட்டிக் காயப்படுத்தப்பட்டு
நலிந்த மரங்களில் இன்னும் ஏதேனும் பறவைகள்
தொங்கிக் கொண்டிருக்கின்றனவா
என்று தேடும் குழந்தைகள்
நிலம் அள்ளப்பட்ட அரசியல்க் குழிகளில் வீழ்கின்றனர்.
நிலத்திலிருந்து நாம் துரத்தப்படுகையில்
எல்லாப் பறவைகளும் வீழந்தன
நிலத்தின் இருதயத்தைத் தின்னும்
அந்நியக் குடிகள் விழுங்கினர் கடல்வெளிகளை
பொறியாய் நுழைந்த
சிங்கங்கள் நிலத்தை வேட்டையாடின.
மணல்வெளியில் புதிதாய் பதியும்
கால்கள் எழுதும் கதைகளால்
சிறுவன் குளத்து மீன்கள் துடித்திறந்தன
அந்நியப் பெயர்களால்
கொல்லப்பட்ட கிராமங்களில்
புத்தரின் ஞானம் அமைதியைத் தின்கிறது.
எல்லாம் பட்டு வீழந்த பிறகும்
குழந்தைகள் நிலத்தின் பாடல்களை
பாடிக் கொண்டிருக்கின்றனர்
குழந்தைகள் நிலத்தை இழந்ததை
நான் எப்படி பாடாமலிருக்க முடியும்?
நன்றி - புது எழுத்து மார்கழி 2011
1 கருத்துகள்:
நிலத்தில் விழுந்த பறவைகளின்
இறக்கைகளில்
ஒட்டியிருந்த வார்த்தைகளை
மீட்டுச் செல்கிற காற்றாய்
நிலப் பாடல்கள்
ஒலித்துக் கொண்டே இருக்கட்டும்.
குரலை பிடுங்கியெறிய விடாத
அக்கறைமிகு பாதுகாப்புடன்.
கருத்துரையிடுக