மீன் குழம்பின் வாசனையை முகரும்படி செய்து
சுடப்பட்ட கறுவாட்டுத் தலையை
அடுப்பங்கரையில் தொங்கவிட்ட பின்னும்
திரும்பவில்லை தலைமறைவாயிருக்கும் பூனை
துள்ளி விளையாடும் வளைகளில்
எலிகள் பூனைகளுக்காய்
எச்சரிக்கை சுவரொட்டிகளை எழுதியிருக்கின்றன
புத்தகங்களுக்கு மேலால்
படுக்கை அறையில்
அடுப்புச் சாம்பலுக்குள்
மயிர் கொட்டி உறங்கும் என் பூனை எங்கே?
வாய் கட்டுண்ட பூனை
மறைவாயிருந்து எந்தப் பாடல்களையும் படிப்பதில்லை
மௌன விரதமிருக்கும் அதற்கு
எலிகள் கட்டியிருந்த மணியொன்று
அசையும்படியும் நகர்வதுமில்லை
இருண்ட காலத்தில் தலைமறைவாயிருக்கும் பூனை
மியாவ் என்றெழுப்பும் சங்கீதத்திற்காய்
காத்திருக்கிறது என் வீடு.
0
தீபச்செல்வன்
நன்றி: காலச்சுவடு, ஓகஸட் 2014
0 கருத்துகள்:
கருத்துரையிடுக