பாடல்பெற்ற தலத்தில் பெற்றோம்
கொன்று மறைக்கபட்டவர்
எலும்புக்கூடுகளால் நிரப்பட்ட
மாபெரும் சவக்குழியை
உக்க மறுக்கும் எலும்புக்கூடுகள்
எந்த வாக்குமூலத்தையும் அளிக்கமுடியாதவையெனச்
சொல்பவனின் பல்லிடுக்குகளில்
சிக்கிப் படிந்துள்ளன சதைத்துண்டுகள்
உறக்கமற்ற மரணத்தோடு
மாபெரும் வதையோடு
சரிந்துபோய்க் கிடப்பவர்கள்
உக்க மறுக்கும் வார்த்தைகளோடிருந்ததை
நான் கண்டேன்
ஆ.. எனப் பிளந்த வாய்கள்
உடலுக்குக் குறுக்காய் கைகள்
தலைகள் திரும்பித் திரும்பி யாரைத் தேடின?
எலும்பாய் கிடக்கும் அச்சிறுவன்
என்ன குற்றமிழைத்திருப்பான்?
ஏன் எங்களைக் கொன்றீர்களெனும்
இறுதிவாக்குமூலங்கள்
இன்னமும் முனக
குற்றங்கள் நிறைந்த இரத்தத்தில்
நனைந்துபோனது திருக்கேதீஸ்வரத் தேவாரங்கள்
எல்லாமும் கொல்லப்படும் தேசத்தில்
எங்கும் சவக்குழிகள்
எங்கும் எலும்புக்கூடுகள்
கொல்லப்படமுடியாத வாக்குமூலங்களுடன்
அலைகின்றன மண்ணுக்கு அடியில்
மண்ணுக்குளிருந்து எழும்பி வருகின்றன
எலும்புக்கூடுகள்
யாருக்கும் புரியும் மொழியோடு
திருக்கேதீச்சரத்தானே நீயேனும்
எமக்காய் வந்தொரு சாட்சி சொல்லு!
0
தீபச்செல்வன்
2014 பெப்ருவரி
நன்றி: கணையாழி, ஞானம், குளோபல் தமிழ் நியூஸ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக