கடல் அலை நுரைகளில் திரளும் நினைவுகளை
கொத்தி செல்கின்றன
சிறகடித்தெழும் கடற்பறவைகள்
இப்படி ஒரு கடற்ரைக்காக
ஒரு கிண்ணம் மதுவுக்காக
ஒரு உரையடாலுக்காக
ஒரு வயிறு குலுங்கும் பகிடிக்காக
நீ திரும்பியிருக்கும் ஒரு பொழுதுக்காக
ஒரு பேனாவைத் திருடிக்கொள்ளலாம்
மீண்டுமொரு நாள்
பாதியுடைந்த பள்ளிக்கூட வகுப்பறையில்
படிக்க முடியுமெனில்
ஒரு மேசையில்
புத்தகங்களை பரப்பி வைக்க முடியுமெனில்
கதிரையின் பின் பக்கமாக
புத்தகப் பையை கொளுவி வைக்கலாமெனில்
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகேயிருந்த
உன் வீட்டுக்கு கையசைத்துச் செல்லலாமெனில்
ஒரு பேனாவைத் திருடிக்கொள்ளலாம்
அன்று நான் உனது பேனாவைத் திருடவில்லை
யாரோ திருடினர்
நமது பால்யத்தை
நமது வகுப்பறையை
நமது நகரத்தை
எந்தப் பேனாவாலும்
எழுதி முடிக்கவியலாத
பிரிவுகளால் சிதறுண்டோம்
பாடக்குறிப்புப் புத்தகங்களில் அலையும்
பால்யத்தின் பாடல்களை
யாரோ சில சிறுவர்கள் இசைக்கின்றனர்
காயப்பட்ட வகுப்பறையில்
அன்று நான் திருடியதாக
நீ பறித்துக்கொண்டது எனது பேனா
அப்படியெனில்
உனது பேனாவை திருடியவன் யார்?
மறுபடியும் ஒரு இலையுதிர்காலத்தில்
தாய்மண்ணுக்கு வருகையில்
உன்னை என் நண்பனாக்கிய
அந்த நண்பனைத் தேடுவோம்!
தீரா மையோடிருக்கும் அந்தப் பேனா
யாரிடமுள்ளது?
அன்றைய பேனாச் சண்டையில்
கிழிந்துபோன பள்ளிச் சட்டையில்
காணாமல் போன உனது போனா
எழுதிவிட்டது ஒரு கனவுக்காலத்தை
தீபச்செல்வன்
2013
பள்ளித் தோழன் சுமனுக்கு
நன்றி - கரை எழில் 2014
0 கருத்துகள்:
கருத்துரையிடுக