கேட்டினால் மேவிப் பெருகிய பாலியாற்றைப்போல
பேராராய்ப் பெருக்கெடுத்த நம் குருதி
உதுமானியப் பேரரசின் சிறைகளுக்குள்
சிந்தப்பட்ட ஆர்மீனியரின் குருதி
வற்றி வறண்ட நெடிய சமுத்திரம்போல்
புழுதியாய் கிளம்பி நமக்கெடுத்த தாகம்
பாலைவனங்களில் கருகிய
தார்பூரரின் தாகம்
தணல் மூண்ட பெருங்காடுபோல்
தீயாய் நாம்மை துவட்டிய பசி
பட்டினியோடு மூச்சடங்கிய
கம்போடிய வியட்நாயிமரின் பசி
தலை அறுக்கப்பட்ட பறவைபோல்
அனல் படரத் துடித்த நம் வயிறு
பசியால் மடிந்த
உக்கிரேனியரின் ஒட்டிச்சுருங்கிய வயிறு
விசமேற்றி இறந்த மீன்களின் மூடா விழிகள்போல்
நஞ்சுறைந்து வாடிய நம் இருதயம்
நாஸிகளின் விஷ வாயுவால் முட்டி வெடித்த
யூதர்களின் இருதயம்
கிழிந்த செவ்வரத்தம் பூக்கள்போல்
விந்துக்கரை படிய குதறி வன்புணரப்பட்ட நம் யோனிகள்
உகூட்டு ஆண்குறிகள் பிய்த்தெறிந்து
குருதி உறிஞ்சிய
ருவாண்டா துட்சிகளின் யோனிகள்
எனதன்பு மகளே!
எல்லா வழிகளாலும் அழிக்கப்பட்டவர்களின்
இப் பூமியில்தான்
உன்னைப் போலவே
மீண்டெழுந்தவர்களும் உண்டு.
¤
தீபச்செல்வன்
நன்றி குங்குமம் 17.03.2017
0 கருத்துகள்:
கருத்துரையிடுக