Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வியாழன், 8 ஜூன், 2017

தீபச்செல்வன் கவிதைகள்01. அம்மாவைப்போல

மாத்திரைகளை மென்று
ஊசி மருந்துகளை ஏற்றி
கருத் தங்குமென
காத்திருப்பவளின் மார்ப்பு சுரந்தது
யாரோ ஒரு குழந்தையைக் கண்டு

வீதியில் செல்லும் எல்லாக் குழந்தைகளையும்
தன் குழந்தைாய் தலை தடவுகிறாள்
வாடகை தாயாகி கருப்பை இழந்தவள்

கண்களில் நீர் அண்டாதபடி
செல்லமாய் பேசி
தெருவில் மீட்ட குழந்தையின்
அனாதரவை மறக்க செய்கிறாள் தாயொருத்தி

பிள்ளைகள் இல்லா வீட்டில்
ஒருவருக்கொருவர் குழந்தையாகி
சண்டையிட்டு விளையாடினர்
முதிர்ந்த தம்பதியர்

நாட்டிற்காய் மாண்டுபோன
பிள்ளையை எண்ணி
பசுக் கன்றை முத்தமிடுகிறாள்
போருக்குப் பிள்ளையை அனுப்பியவள்

பிரியமிகு நண்பனே!
உடல் வருந்தி மாத்திரம்
உறவுகளைப் பெறுவதில்லை

யுத்தம் தின்றவுன் அம்மாவைப்போல
நான் இருப்பேன்
இனிக் கலங்கா உன் விழிகளில்
உயிர் வருந்தும் உறவாய்.
0

02. எனக்குப் பின்னால்
ஒரு நண்பன் இருக்கிறான்


பெருங்கடலை கடப்பதும்
பெரு வானில் பறப்பதும்
எளிதுதான்
தீ மலைகளை சுமப்பதும்
பனிக் காட்டில் நனைவதும்
எளிதுதான்
என் ஜனங்களின் காவியத்தையும்
எழுதியிராத எல்லாக் கவிதைகளையும்
எழுதும் எழுதுகோலைப்போல
எனக்குப் பின்னால்
ஒரு நண்பன் இருக்கிறான்
0

03. பிரசுரம் ஆகியிராத கவிதை

எப்போதும் விலகியிராத
மஞ்சள் ஒளி மிகுந்த மாலை
உதிர்ந்த மாவிலைகளின் சித்திரம்
இரண்டு தேனீர்க் கிண்ணங்கள்
மாத்திரைப் பெட்டிகள்
வெகுதூரம் சென்றுவிட்ட
காதலியின் நினைவுகள்போலப்
பறந்து திரியும்
வண்ணத்துப் பூச்சிகள்
நண்பா! எஞ்சியிருப்பது
புத்தகங்கள் நிரம்பிய வீடு
பிரசுரம் ஆகியிராத ஒரு கவிதை
உன் தோழமை

04. பயங்கரவாதியின் நண்பன்

நட்சத்திரங்களின் பானத்தை அருந்திவிட்டு
ஒளி வியர்க்க நான் திரும்பவில்லை
விலங்கிடப்பட்ட கைகளில் குருதி பிசுபிசுக்க
கவிதையிலிருந்து திரும்பினேன்

வாள் முனையில் சொருகப்பட்ட
இருதயம் முட்ட
அழிக்கப்பட்டவர்களின் குரல்களுடன்

நிலவு விரட்டப்பட்ட இராத்திரி
தனியொருவனுடன் செல்லும் பேருந்து
திரும்ப இயலா யாருமற்ற நெடு வழி
பூட்டப்பட்ட கதவுகள்

எனினும் நண்பா நீ உடனிருந்தாய்
சனங்களுக்காய் எழுதியதனால்
பயங்கரவாதி என
குற்றம் சுமத்தப்பட்ட கவிஞனுடன்
பின் தொடரும் நிழலாய்.

05. ஒரு கவிஞனுக்கு காதலியாய் இருப்பது

நெடுந்தூரப் பயணங்கள்
நேரம் தவறிய உணவு
கவனிக்காத உடல்
மழிக்காத கன்னங்கள்
வாரப்படாத முடி
கண்ணாடி பார்க்காத முகம்
தேனீரில் கரைந்த நாட்கள்
வீட்டை மறந்த பொழுதுகள்
வருமானமற்ற பிழைப்பு
உடமையற்ற வாழ்வு
எப்போதும் கவிதையில் மூழ்கிய மனம்
விடுதலை பற்றிய கனவு
புத்தகங்களுடனான இரவுகள்
இயல்பற்ற நிலை
துப்பாக்கியின் குறிக்குள் இலக்கிடப்பட்ட
தன்னை மறந்த
ஒரு கவிஞனுக்கு
காதலியாய் இருப்பது
வெகு சுலபமில்லை

நன்றி: தீராநதி ஜூன் 2017

0 கருத்துகள்:

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...