Blogger இயக்குவது.
| புதிய நூல்கள்: பயங்கரவாதி - டிஸ்வரி புக்பேலஸ் | நான் ஸ்ரீலங்கன் இல்லை - யாவரும் பப்ளிசர்ஸ் | நடுகல் டிஸ்வரிபுக் பேலஸ் | deebachelvan@gmail.com | 0772487257

வெள்ளி, 29 மே, 2009

பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி

o தீபச்செல்வன்
----------------------------------------------------------------
மண் சிதறி மூடப்பட்ட பதுங்குகுழியில்
மூடுண்டு போயிற்று
கடைசிவரை வைத்துக் காத்திருந்த
உடைந்த முகத்தின் எச்சங்கள்.
எங்கள் வெளி அர்த்தமற்றுப்போய்
அந்தரத்தில் துடித்துக்கொண்டிருக்கிறது.
மண்ணில்
உலகத்தின் யுத்தம் நிகழத்தொடங்கியது.

மிகவும் பயங்கரமான வெளியில்
தூக்கி வீசப்பட
கொதித்து துடித்துக்கொண்டிருக்கிறது மனம்.
மண்ணடியில்
புதைந்துபோனது விரிந்த வானமும்
நெடுநாள் காணாதிருந்த நட்சத்திரங்களும்.
வாசல் அடைக்கப்பட்ட குழியில்
யாரோ அடைக்கப்பட்டு நாளாகிறது.
முகங்கள் வெளியில் தனித்தலைந்தன.

மூடிப் புதைத்துவிடப்பட்ட கிராமம்
பிணங்களின் கீழ் அழுகிக்கொண்டிருக்கிற வீடு
தென்னைமரங்கள் பிடுங்கி நிரப்பட்ட கிணறு
எல்லாம் மூச்சடங்கி உயிர் துறக்கிறது.
முகமற்ற நகரத்தில்
அழிப்பின் சபதம் எழுதப்பட்டு
சிறையிலடைக்கப்படுகிறது.

அச்சத்தின் சனங்கள் வெளியில்
எடுத்து போடப்பட்டனர்.
உடைந்த சனங்களை மீளவும்
குழிகளில் போட்டு மூடிக்கொண்டு
அழிவு புதைக்கப்பட்டு சமதரையாக்கப்பட்டிருக்கிறது.
மணல் பரப்பி நடந்து கொண்டிருக்கிறது
மனிதாபிமான யுத்தம்.

எண்ணி அடுக்கப்பட்ட துண்டங்களாய்
வந்து விழுகின்றன
தாய்மாரை இழந்த குழந்தைகள்.
மழை மூழ்கடித்த இரவில்
கடும் சமரில்
யாரும் அறியாது இருளை பெய்தபடி
நிலவு பதுங்குகுழியில் வந்து ஒளிந்திருந்தது.

ஒளியிழந்து கொடியில் அடிபட்டு
வீழ்ந்து போகிறது சூரியன்.
இருள் பெரு வெள்ளமென வந்து
பதுங்குகுழிகளை குடித்து பசியாறின.
மண்ணை கிளறி உழுது
எச்சரிக்கைகளை விதைக்கப்பட்டன.

உலகின் சபையில் யுத்தம் பேராதரைவை பெறுகிறபோது
பதுங்குகுழியில் ஒளிந்திருந்த வெளி
கனவின் சுடலையாகிய
தரையிலிருந்து எழுந்து போகிறது.
எங்களுடன் நிலவும் பயங்கரவெளியில்
தோய்ந்தபடி அலைந்து கொண்டிருக்கிறது.
------------------------------------------------------------------------
29.05.2009

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

அருமையாக எதார்த்தமான கவிதைகளைப் பிரசவித்த தோழர் தீபச்செல்வனுக்கு வாழ்த்துக்கள்.

தொடர்ந்து பதிவு செய்யுங்கள்.

உங்கள் பதிவு தொடர்பாக http://kalamm.blogspot.com/ களத்துமேட்டில் பதிவு செய்துள்ளேன்.

நன்றி.

தங்க முகுந்தன் சொன்னது…

எப்படி - என்னவென்று - யாரிடம் இதைச் சொல்வது? எல்லாமே சூனியமாகிறதா? அல்லது சூனியமாகிவிட்டதா? உணரவோ - அறியவோ முடியவில்லை!

இளைய அப்துல்லாஹ் சொன்னது…

உங்கள் மன உணர்வுகள் யதார்த்தமானவை

Theepachelvan சொன்னது…

அன்பின் ஈழவன்,

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றிகள்.
நீங்கள் உங்கள் வலையில் எழுதிய பதிவை பார்த்தேன்.
அதற்கான எனது கருத்தை பதியவிருக்கிறேன்.

மிக்க நன்றி


அன்பின் தங்கமுகுந்தன்.

வருகைக்கும் உண்விற்கும் நன்றி.


அன்பின் இளைய அப்துல்லாஹ்,

உங்கள் வருகைக்கம் கருத்துகளுக்கும்
மிக்க நன்றி.
தற்போது லண்டனிலா இருக்கிறீர்கள்.
தொடர்ந்து இணைந்திருப்போம்.
உரையாடுவோம்.

அன்புடன் தீபச்செல்வன்

வன்னி வளைப்புப் பற்றிய கவிதைகள்

# ஆட்களை இழந்த வெளி
# அடருகிற இரவொன்றில் தின்னப்பட்ட கடல்
# பதுங்குகுழியைவிட்டு அலைகிற வெளி
# பந்துகள் கொட்டுகிற காணி
# மணலில் தீருகிற துயர்
# நிலம் பெயர்ந்தலைய வந்துவிடு
# பயமுறுத்துகிற இருள்
# சுற்றி வளைக்கப்பட்ட பாதுகாப்பு வலயம்
# ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்
# எலும்புக்கூடுகளை வெளியேற்றுவதற்கான வழி
# கடல் நுழைகிற மணற் பதுங்குகுழி
# அறிவிக்கப்பட்ட வலயத்தில் நிறைகிற சுடுமணல்
# தாகம் பாய்கிற நதிக்கான கனவு
# யாருமற்ற நகரின் தெருவினை மிதிக்கிற கொடு நிழல்
# சொற்ப எண்ணிக்கையாக்கப்பட்ட குழந்தைகள்
# சுற்றி வளைக்கப்பட்ட கிராமத்தின் சரணடைகிற பொதிகள்
# மரண நெடில் வெளி இரவு
# கைப்பற்றப்பட்ட நகரம் பற்றியெழுகிற பெருந்துயர்
# மற்றொரு நகரத்தை நோக்கி நடைபெறுகிற படையெடுப்புகள்
# மலைப்பாம்பு காப்பாற்றப்போகிற முட்டைகள்
# மாதா அழைத்து வைத்திருந்த மாடுகள்
# நீர் அறிந்திருக்காத சிலுவைகள்
# தேங்காய்களை தின்று அசைகிற கொடி
#முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி
#மனிதாபிமானத்திற்கான படைநடவடிக்கை
#அண்மையில் மிதிபடுகிற கடல்
#மரங்கள் பின்வாங்குகிற இன்றிரவு
#நம்மைத் தொடருகிற போர்
#குழந்தைகளை இழுத்துச் செல்லும் பாம்புகள்
#அழிப்பதற்கு பிரகடனம் செய்யப்பட்ட நகரத்தின் கதிரைகள...
#அவகாசத்திற்குப் பிறகான படைநடவடிக்கை.
#பெரிய நகரை தின்கிற படைகள்
#போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்
#போர் தொடங்கும் குழந்தைகளின் கனவுகள்

வலைப்பதிவு பட்டியல்

Related Posts Plugin for WordPress, Blogger...