வழியில் தொலைந்த ஆடுகளின் கதைகளால்
நிறைந்துபோயிருக்கிறது இந்த நாள்.
இந்த வானொலி* வழி தவறியவர்களை
இன்னும் தேடிக்கொண்டிருக்கிற இரவு நிகழ்ச்சியை
ஓலிபரப்பிக்கொண்டிருக்கிறது.கைகளுக்குளிலிருந்து எப்படி நழுவி விழுந்திர்கள்
என்று ஒவ்வொரு தாய்மார்களும்இரவு நிகழ்ச்சியில் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
இறுதி நாளிலிருந்து இன்று வரை
உனதம்மா** உன்னை*** தேடிக்கொண்டிருக்கிறாள்.உன் ஞாபகமாய் என்னிடமிருக்கிற ஒரு சேட்டை
எப்படி பத்திரிகையில் விளம்பரமாக பிரசுரிக்க முடியும்?
புகைப்படங்கள் தொலைந்த வழியில்
வழி தவறியவர்களின்
குருதியுறைந்த உடல்கள் பற்றிய கதைகளை
வேறொரு பத்திரிகையின்**** மற்றொரு
பக்கம் எழுதிக்கொண்டேயிருக்கிறது.
தொலைந்தவர்களை கடிதங்களால் விசாரித்துக்கொண்டேயிருக்கிறது
இன்னொரு பத்திரிகை. *****
தேடிக்கொண்டிருப்பவர்களின்
துயரம் மிகுந்த சொற்களை நிரப்பிய கடிதங்களை
கொண்டு வந்தபடி
ஒவ்வொரு வாரமும் வந்துகொண்டிருக்கிறது.
எல்லோரும் திரும்பிவிடுவார்கள் என்ற
நம்பிக்கையை மட்டுமே இந்தக் கடிதங்கள் வாசிக்கின்றன.
தவறி விழுந்த குழந்தையின்
அழுகை எப்படி அடங்கிப்போயிருக்கும்?
கை நழுவி மறைந்த சிறுமியின்
இரவு எப்படியிருக்கும்?
தனித்து தொலைந்த சிறுவனின் வழி எப்படியிருக்கும்?
குழந்தைகளை இழந்த தாயின் வலி எப்படியிருக்கும்?
மனைவியை பிரிந்த கணவனின் திசை எப்படியிருக்கும்?
சகோதரர்களை பிரிந்தவர்களது துயர் எப்படியிருக்கும்?
எல்லோரையும் பிரிந்தவர்களது துயரால் மிகுந்திருக்கிற
கடிதங்கள் அதிகரித்தபடி பிரிவை அளந்துகொண்டிருக்கின்றன.
பதில் வார்த்தைளற்றுக் கிடக்கிற கேள்விகளால்
இந்த இரவு குலைந்து கிடக்கிறது.
காத்திருப்பும் திரும்புவார்கள் என்ற நம்பிக்கையும்
வளர்ந்துகொண்டேயிருக்கிறது.
அவர்கள் தவறிய வழிகள் மூடுண்டபடி
பிரிவை உயர்த்துகிற கடிதங்கள் மிக ஆழமாக தாழ்க்கப்பட்டு
மண் கொட்டிப் பரவியிருக்கிறது.
யாரும் திரும்பியதாக இல்லை என்பதை
மிகச் சோகமாக சொல்ல முடியாமல்
கரைந்து போகிறது அந்த வானொலியின் இரவு நிகழ்ச்சி.
மகிழ்ச்சி தரும் சொற்களான
தவறிய யாரேனும் ஒருவர் எழுதிய கடிதம் ஒன்றுக்காக
உன் அம்மா காத்துக்கொண்டிருக்கிறாள்.
----------
09.12.2009
*சூரியன் எப்எம், **கஜானந்தினுடைய அம்மா, ***கஜானந், ****சுடரொளி வார இதழ், *****மித்திரன் வார இதழ்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக