உயிர்த்தெழாது வாடிய
குருத்தோலையை மட்டும் விட்டுச் செல்கிறேன்
சுவர்களில் பதுங்குமளவுக்கு விழுந்த
குழிகளில் எல்லாம்
என் கனவுகள் நிறைக்கப்பட்டிருக்கின்றன
எப்பொழுதுமில்லாமல்
பல்லிகள் விழுந்து வெருண்டோடுகின்றன
வேண்டுமானால் விட்டுச் செல்கிறேன்
தேனீர் காயாத கோப்பைகளையும்
வாடிய பலகாரத் துண்டுகளையும்
கனவைத் துரத்தும் பயங்கரங்கள்
கொண்டாடிப் பருகுகின்றன என் காயாத குருதியை
கிழிக்கப்பட்ட கவிதைகளை பல்லிகள் சுமக்கின்றன
காயும் சவற்காரக் குறையை
குழாயில் கசியும் நீர்த்துளிகள் ஈரமாக்கின்றன
இல்லாத அறையில்
நான் திரிகிறேன்
நினைவுகள் கழற்றப்பட்ட சுவரில்
பிரியாத பாதிச் சித்திரத்தில்
சாம்பல் கொட்டுகிறது
அச்சுறுத்தல்களால் செய்யப்பட்ட
அறையில் இருந்து
துப்பாக்கிக் குண்டுகளால் செய்யப்பட்ட
கொடும் வெளிக்குச் செல்கிறது உயிர்த்தெழாத பறவை
இரத்தம் சொட்டும் கனவுகளால்
ஈரமாகும் என் முகத்தை துடைக்க யாருமில்லை!
_________________________
30.05.2011
நன்றி : மறுபாதி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக