--------------------------தீபச்செல்வன்
________________________________________
------------------------------------------------------------------------------
உனக்கு கடிதம் எழுதும்
என் பேனாவுக்கு பக்கத்தில்
எல்லோரும் அழுதபடி
இருக்கிறார்கள்
நாங்கள் தங்கியிருப்பது
மாணவ விடுதியல்ல
சிறைச்சாலை அல்லது
அகதிமுகாமாக
இருக்கவேண்டும்.
இங்கிருக்கும்
சில சகோதரர்களின்
உறவுகள் அங்கு
விமானங்களால்
பலியெடுக்கப்பட்டடதாக
அழுதுகொண்டிருக்கிறார்கள்
யாருக்கும் யாரும்
ஆறுதல் சொல்ல முடியாது
மூலைகளில்
வைக்கப்பட்டிருக்கிறோம்.
நேற்று முன்னயை தினம்
எங்களோடிருந்த
மாணவர்கள் இருவர்
சுட்டுக்கால்லப்பட்டுவிட்டார்கள்
எங்களால் அவர்களுக்காக
சத்திமிட்டு
அழக்கூட முடியவில்லலை.
அகதி முகாமாயிருக்கும்
எங்கள் விடுதிமீது
கைக்குண்டுத்தாக்குதலும்
நடத்தப்பட்டது
சிலர் வைத்தியசாலையில்
மருந்துப்பொருட்கள் இன்றியும்
அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நாங்கள் தங்கியிருக்கும்
மாணவ அகதிமுகாமிற்குள்
அச்சுறுத்தும்படி
ஆயுதங்களுடன் புகுந்து
சோதனையிடப்பட்டது
முகாம்களை தகர்ப்பதுபோல
முற்றுகையிடப்பட்ட
நாளின் அதிர்ச்சியில்
எல்லோரும் படுகொலைசெய்யப்பட்ட
புத்தகங்களாக பரவி இருக்கிறோம்.
எங்களில் சிலரை காணவில்லை?
ஊரடங்கு அமுலில் சிலர்
காணாமல் போகிறோம்?
ஊரடங்கு அமுலற்றபோது
பலியெடுக்கப்படுகிறோம்
எல்லோரும் வேண்டுமளவுக்கு
கெளரவமாக வருத்தப்படுகிறோம்.
எவ்வளவு வலிமையாயிருந்த
எங்கள் குரலின் நாடி
துப்பாக்கிகளின் முற்றுகையிலும்
பச்சை உடைகளின்நிழலிலும்
அன்றைக்கு
ஒடுக்கித்தான்போனது
அவர்களது துப்பாக்கிகளும்
வீடியோக்களும்
எங்கள் முகங்களை
பதிவுசெய்தபோது
உன் முகமும் அழைப்பும்
அவசரமாகவே ஞாபகமானது
--------------------------------------
0 கருத்துகள்:
கருத்துரையிடுக