--------------------------------------------------------------------இது தாக்குதல் நடந்த படகுத்துறை
-------------------------------------------------------------------
அதே குரூரப் பறவையின் வெறியில்
இன்னொரு கிராமமும் சிதறியது
இன்னும் கூச்சலிட்டு
அழுது அழைக்கிறது
படகுத்துறைக்கிராமம்.
அழுகை சலித்துப் போகிறது
எத்தனை சிதறிய கிராமங்களின்
கவிதைகளின் தலைகள்
உருண்டுகொண்டிருக்கின்றன
எதுவரை மரணத்தின் நாக்கு
விமான முகங்களில்
அசைந்தபடி
கிராமங்களை கிழித்துப்போகும்.
எந்தப்பதிலுமற்றுக்கிடக்கிறது
கிராமமும், அடுக்கப்பட்ட
பிணங்களும்
சிதறிய கிராமங்கள்
தெரிந்தே குரலிட்டன
அவர்கள் குண்டுகளால்
அரசியல் யாப்பு செய்தவர்கள்
நச்சு வாயுகளால்
இதயம் கொண்டவர்கள்.
இப்போதும் இதிலும்
இவைகளைப் பார்த்தும்
அவர்களால் மறுப்புக் கூற முடிகிறது
கண்ணைக் கட்டிக்கொண்டு
கோழை முகத்துடன்
அதே புன்னகையால்
குரலை உயர்த்தி
பதில் வாசிக்க முடிகிறது
கிராமங்களை விழுங்கிய திருப்தியுடன்.
அவர்களால் முடிவது
பிணங்களின் கண்காட்சியை
நடத்தவும்
சவப்பெட்டிகளை சமரசத்துடன்
வழங்கவும்
சுய உரிமையின் பெயரால்
சிதறிய எங்களைக் குவித்த
ஆட்சி பீடத்திலிருந்து
தங்களை இனம்காட்டியபடி.
படகுத்துறை கிராமத்தையும்
அமைதிப்படுத்தி
தீர்ப்பெழுதி குறிவைத்து
குற்றம் பூச முடிந்தது
அது பெண்களையும்
குழந்தைகளையும்
அதிகமாய் பலிகொடுத்த
பாரத்துடன் செய்திக்காக கிடக்கிறது.
__________________________________
02.01.2007 இந்த தாக்குதலில் பதினைந்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகினார்கள். சிறுவர்கள் கால் முதலிய அங்கங்களை இழந்தார்கள்.
___________________________________
மீள்எழுத்து:நன்றி:ஈழநாதம்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக