----------------------------------------------------------------------------
தீபச்செல்வன்
____________________________________
தீபச்செல்வன்
____________________________________
தண்ணீர் வற்றுகிற வாய்க்காலினை
சிரட்டையால் தோண்டுகிற சிறுவனிடம்
பாலைவனம் எரிகிற தாகம் முட்டியிருந்தது.
வெறும் குடங்களில்
ஏங்கங்களை நிரப்பி வைத்திருக்க
ஒரு இரவில் பிட்டுடன்
அருந்திய தண்ணீர் ஒரு நதியென
கனவில் பாய்ந்து கொண்டிருக்கிறது.
எல்லாத்திசைகளிலிருந்தும் எறிகனைகள்
வருகிறபோது
குழந்தைகளை காத்துக்கொள்ளுகிற
கோயில்களை கூப்பிட்டோம்.
வானம் முழுக்க விமானங்கள்
நிறைகிறபோது குழந்தைகளை
கூட்டி அணைத்தோம்.
கோயிலிலும் தெய்வங்கள் வெளியேறின.
சிதறுண்டுபோன மனித உடல்கள்களை
விட்டுச்செல்கிற போது அவலத்தின் பெரு நதி
கிணறுகளை அள்ளிச் செல்ல
தடை செய்யப்பட்ட பகுதியிலிருந்து
வானம் வெளியேறுகிறது.
கிணறுகள் எங்கும் குழந்தைகள்
ஒளிந்திருக்க தண்ணீர் முழுவதும் வற்றிப்போனது.
கூட்டுக்குள் வைத்து வேட்டையாடப்டுகிற
பறவைகளிடம் இனியொரு நதியினெ வளர்ந்த கனவு
முழுவதும் சுட்டு விழுத்தப்படுகிறது.
ஒரு நிமிடத்திலேயே
பிரிந்தபோன வாய்க்காலின் கரையில்
தென்னை மரத்தில் சிரட்டைகள் உதிர
வாய்க்காலில் பாலைவனம் பாய்கிறது.
பொதிகளுக்குள் தண்ணீர் தாகங்களை
நிரப்பி சுமக்கிற தெருவின்; நடுவில்
கிணறு திறபட்டிருக்க அதற்குள்
மூடுண்டு போகிற தணலெரிந்தன.
அந்தச் சிறுவனும் இல்லை.
வாய்க்காலும் இல்லை.
பெருகுகிற தண்ணீருக்கான தாகத்தில்
குடங்கள் திரிய வாளிகளுள்
சிறுவர்களின் வளர்ப்பு மீன்கள்
உடல் காய்ந்து அலைந்தன.
காய்ந்த ரொட்டியின் மீது
அவன் எழுதிய சொற்கள் வெறுமையாயிருக்கிற
ரொட்டித்தகரங்களில் சுடுபட்டன.
இல்லாத மாவுக்கு வரிசை கட்டி நிற்கிற
கடையில் பிட்டு சுமக்கிற தேவாரங்கள் நினைவு வர
குறைந்து வருகிற தரையில்
தண்ணீர் மேலும் காய்கிறது.
தண்ணீருக்கான வழிகள்
அடைபட்டுடிருக்க
வாழ்வின் கனவின் நதி இனியொரு இரவில்
முற்றுகை அதிகரித்த காட்டினுள்
மீள பெயர்ந்து பாய்கிறது.
------------------------------------------------------------------------------------
13.01.2009
0 கருத்துகள்:
கருத்துரையிடுக