
இலைகொட்டிய அலம்பல்களில்
குந்துகிறது துரத்தப்படும் கூரை.
களப்புவெளியின் சகதிக்குள்
புதைந்துவிட்ட ஒற்றைப் பேருந்துக்குள்
ஒளிந்திருக்கும் குழந்தைகளை
தேடுகின்றன கொத்துக் குண்டுகள்.
ஒற்றை புளியமரத்துடன்
வெளித்துக்கிடக்கிறது மாத்தளன்.
விமானங்கள் குவிந்து எறியும் குண்டுகள்
விழப்போகும் அறிவிக்கப்ட்ட பாதுகாப்பு வலயத்தில்
நிறையும் சுடு மணலில் ஓடும்
குழந்தைகளின் பாதங்கள் வாடிப்புதைந்தன.
பனைகளுக்கிடையில்
படருகிறது கந்தக வெம்மை
உவர்க்களியில் கொதிககும் ஈரலிப்பில்
எழுத முடியாத சொற்கள்
உப்புவெளியில் பாதிச்சூரியன்
சுருண்டு விழ
அனல் காற்றில் பறந்துபோகிறது
இல்லாத குழந்தைகளது
அகற்றிக்கொண்டு வரப்படும் சட்டைகள்
கிணியாத்தடிகளில்
கட்டிய கயிறுகளுக்கிடையில் தொங்குகிறது
நேரம் குறித்திருக்கும்
கொடு நெருப்பின் கடைசித்துளி.
சன்னங்கள் வந்து மிரட்டும் இரவில்
உடல்வேலன் முள்ளுகளுக்குள்
ஒளிந்தனர் குழந்தைகள்
மண் துடிக்க
கடல்
மேல் எழுந்தது.
முன்பொரு வலயத்தில்
சிதறுண்டுவர்களின் பெயர்களை
யாருமற்ற சிறுவன்
சுடு மணலில் எழுத
கள்ளிச்செடிகளுக்குள் கிடக்கிறது
மிஞ்சியிருக்கும் அவனின் ஒற்றைப்பொதி.
நறுவிலி உவர்நிலக்காடுகளில் அலைகிற
பெருங்குரல்கள் கேட்கிறதா
பெருங்கடலே?
ஒற்றைத் தென்னை மரத்துடன்
வெளித்துக் கிடக்கிறது வட்டுவாகல்.
தொடுவாய்ப்பிரிப்பில் காய்ந்த கோப்பையில்
பெருங்கனவு மிதக்கக் கண்டேன்
ஒரு பெருமிருகம்
முள்ளிவாய்க்காலை தின்னத்
திட்டுமிடுகிற குருட்டிரவில்
அறிவிக்கப்பட்ட வலயத்தின் மேலாக
பெரும்பாம்பு அலைகிறது.
மணல் சுடாகி கொதிக்கும் கரையில்
ஒரு பொட்டென மிதக்கிறது
எம் கண்ணீராலும் குருதியாலுமான கடல்.
0
தீபச்செல்வன்
12.02.2009, வட்டுவாகலுக்கும் மாத்தளனுக்கும் இடையிலான பகுதியை பாதுகாப்பு வலயமாக அறிவித்து அப் பகுதியில் கடும் யுத்தத்தை மேற்கொண்டது இலங்கை அரசு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக