ஒரு பக்கத்து வானத்தில்
பெருந்துயர் மிகு சொற்கள்
எல்லாருக்குமான
பாவங்களைச் சுமக்கும்
சனங்களின் குருதி மிதக்கும்
துண்டுக் கடலில்
கறுப்பு இரவு திரிகிறது.
எல்லாவற்றையும் கிடங்கிலிருந்து
கழித்து ஓ.. என்ற
பெரும் மூச்சை மணல்வெளியில் புதைத்தாய்
வானம் தாறுமாறாய் கிழிந்தது.
சப்பாத்துகள் நெருக்கி கடலில்
தள்ளிவிடத்துடிக்கும் ஒரு துண்டு நிலத்தில்
எச்சரிக்கப்பட்டிருக்கும் வாழ்வு
மணல் போல உருந்துபோகிறது.
எல்லாவற்றையும் இழந்து
ஒடிவரும் இரவு சிக்கியது
மிருகத்தின் வாயில்
எறிகனை கடித்த
காயத்திலிருந்து கொட்டும் கனவுகளை
மிதிக்கிறது மண்ணை தின்னும் டாங்கிகள்
காயப்பட்ட வழியில் எங்கும் உப்புக் காற்று.
உன்னைச் சூழ்ந்திருக்கும்
கோரமான பற்களின் பசியில் கரைகிறது
உனக்காய் என்னிடமிருக்கிற பதுங்குகுழி.
எச்சரிக்கப்பட்ட துண்டுக் கடற்கரையில்
யாரும் அறியாதபடி மிக அமைதியாக
வந்து வெடிக்கிறது எறிகனை
குழம்பிக் கிடக்கிறது கடல்
பின்னிரவை தொடரக் காத்திருக்கும்
மற்றைய எறிகனைகளில்
அதிரும் அசைவற்ற கடற் கரை முழுவதும்
பாரமான குருதி.
உன்னிடமிருக்கும் பெருஞ்சொற்களில்
சிலதை கேட்டு முடித்தபோது
நாம் சேர்வதற்கான கனவு
நீயிருக்கும் மணற் பதுங்குகுழியின் மூலையில்
உருந்துபோகும் மணலில் புதைந்தது.
அம்மா!, அதிர்கின்றன
மணற் பதுங்குழியின் சொற்கள்.
18.02.2009.
தீபச்செல்வன்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக