மீன்களை தரையில் எறிவதைப்போல
தொலைதூரம் வீசியெறிந்து
உன்னையும் நாம்தான் கொன்றோம்
புலத்தில் தந்தையர்
நிலத்தில் குழந்தையர்
வழிகளில்
ஆழ்கடலில் கவிழ்ந்த படகுகளும்
காடுகளில் கைவிடப்பட்ட பயணப்பைகளும்
கீவ் நகரை கடந்தவனைக் காணாது
ஊசியிலை காடுகளும் துடித்தன
போலாந்து எல்லையில்
வாடிக் கிடந்தது ஒரு சோலிமலர்
துயரப்பிக் கிடக்கின்றன
உன் கேலியின் கோடுகள்
கூடுகள் பறிபோயிருக்கலாம்
இரையற்று பசியில் மரிக்கலாம்
எல்லாப் பறவைகளும்
வலசைகளாயிருப்பதில்லை
ஆழ்கடலில் குழந்தைகளை
சுமந்தபடி அலைந்து
புகலிடம் நெருங்காது திரும்பிய
சிறு படகைப்போல
தன் தாய் மண்ணிலிருந்து
தூக்கி எறியப்பட்ட
புலம்பெயரா முக்குளிப்பான் பறவை*
உயிர் நீத்தது
உக்ரைன் காட்டில்.
இரைக்காய் காத்திருக்கும்
உன் குஞ்சின் கண்ணீரில் நனையும்
வறண்டுபோன உன்னுடல்.
அஸ்வின் சுதர்சனுக்கு
தீபச்செல்வன்
*முக்குளிப்பான் பறவை புலம்பெயராத நீர்ப் பறவையினம்
நன்றி- குளோபல் தமிழ் செய்திகள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக