எதுவும் நடக்கலாம் என்பதற்காய்
எதுவும் பேசப்படலாம்
பின்னர் எதுவும் நடக்கலாம்
கறுப்பை வெள்ளை நிறமெனச் சொல்லக் கூடும்
துயரக் காலத்தில் வசந்தம் பொழிகின்றது என்று
சொல்லக்கூடும்
யாரோ தலைவன் எனவும்
யாரோ காவலன் எனவும்
ஆக்கிரமித்திருப்பவர்களை பாதுகாவலர்கள் எனவும்
சொல்லக் கூடும்
கொடுநரகத்தை சுவர்க்கம் என்றும் சொல்லக் கூடும்
நாங்கள் சுதந்திரமாக நடத்தப்படுகிறோம்
என்று கணந்தோறும் சொல்லக் கூடும்
சொல்லிக் கொடுப்பவைகளை சொல்ல நேரிடுவதுடன்
சமயத்திற்கு ஏற்பவும் சிலர் சொல்லவும் கூடும்
கவிஞர்கள் தலைமறைவாயிருக்கும் காலத்தை
ஒரு மகா உன்னத காலத்தில்
வசிக்கிறோம் என்று சொல்லுகையில்
நீ என்ன உணர்வாய்?
கவிதைகள் எழுதப்படாத காலத்தில்
சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும்
உனது செவி எப்படியானது?
நான் கண்டேன்
அவர்கள் ஒரு கவிஞனை
பத்துக் காசுக்கு விலைக்கு வாங்கினர்
அவர்களுக்காக சொற்களை
வளைத்துக் கொண்டிருக்கும்
அவன் கவிஞன் இல்லை என்றனர் சனங்கள்
சொற்கள் அற்றுப் போயினர் எமது சனங்கள்
ஆனால்
நான் பேசுவேன்
எப்படி வாழ்ந்துகொண்டிருக்கின்றோமென
ஏனெனில் நாம் முகங்களற்றுப் போக இயலாது.
***
தீபச்செல்வன்
ஜீவநதி 2014
ஜீவநதி 2014
1 கருத்துகள்:
நன்று
கருத்துரையிடுக