‘பயங்கரவாதி’ தீபச்செல்வனின் நாவல் (கிண்டிலில்) வாசிக்க கிடைத்தது. அதன் வாசிப்பு அனுபவம் பல்வேறு உணர்வுக்கலவைகளை மனமெங்கும் தூவி சென்றது. உள்ளே உறங்கிக் கிடந்த சில விதைகள் முளை கொள்ளவும் விருட்சமாய் வியாபிக்கவும் உரமும் நீரும் இட்டும் வார்த்தும் சென்றது.
2005 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 இறுதி யுத்த காலப் பகுதி வரைக்குமான காலத்தையும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம் அதைச் சூழ்ந்த பிரதேசங்கள் மற்றும் திருகோணமலையின் தென்னவன்மரபடி(தென்னமரவாடி),சம்பூர், கிளிவெட்டி பிரதேசங்களை கதைக்களமாகக் கொண்டு பயணிக்கும் நாவல் அக்கால கட்டத்தில் நடந்த பேசப்பட வேண்டிய, இதுவரை பேசப்படாத பல விடயங்களை பேசிச் செல்லும் இந்நாவல் கால வரிசை மற்றும் புவியியல் (Chronology and Geography)இரண்டையும் மிக நேர்த்தியாக குறிப்பிடுவதன்மூலம் ஒரு வரலாற்று நாவலுக்கான அம்சங்களைக்கொண்டுள்ளது.
வன்னிப்பெருநிலப்பரப்பில் முழு எடுப்பில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் ஊடகங்கள்,சர்வதேசம் மற்றும் வடக்குக்கு வெளியே வாழும் அனைத்து மக்களின் முழுக் கவனமும் யுத்தம் நடைபெற்ற பகுதியில் குவிந்திருந்த காலங்களில் ஸ்ரீலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த, வெளியுலகோடு தொடர்புகள் துண்டிக்கப்பட்டிருந்த யாழ்ப்பாணத்திலும், யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலும் ஏற்படுத்தப்பட்ட இராணுவ அடக்குமுறைகள், திட்டமிட்ட படுகொலைகள் பாலியல் வன்கொடுமைகள், மற்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் குரல்களை நசுக்குகின்ற இராணுவத்தின் செயல்பாடுகள் பற்றி இந்நாவல் சிறப்பாக பேசுகின்றது.
கிளிநொச்சியிலிருந்து பல்கலைக்கழக கல்வி கற்பதற்காக வரும் மாறன் கதையின் நாயகன் எதிர்கொள்ளும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரின் கட்டமைக்கப்பட்ட இனவொடுக்கல் செயல்பாடுகளையும் அதனைப் பல்கலைக்கழக சமூகம் எதிர்கொண்ட பாங்கினையும் விவாித்துச்செல்லும் ஆசிரியர் கதைசொல்லும் இலாவகத்தால் வாசகனை அசையவிடாது கட்டிப்போடுகிறார். அங்கே அமைக்கப்பட்டிருந்த சோதனைச்சாவடிகள் காவலரண்கள், காட்டிக்கொடுக்கும் முகமூடிகளைத்தாண்டி கதைமாந்தர்கள் நடைபோடுகையில் நமது இதயம் சற்று இடம்மாறி தொண்டைக்குழியில் துடிப்பதை உணர முடிகிறது. அவ்வாறே கருஞ்சேலைக் கரையில் ஓடும் பொன் சரடு போல் ஒரு மெல்லிய அழகான காதல் நாவல் முழுவதும் எம்மை கரைத்துச் செல்கிறது.
பயங்கரவாதி மிகவும் நேர்த்தியான முறையில் சம்பவங்களின் தொகுப்பு, காலவரிசை மற்றும் புவியியல் என்பன ஒன்றுக்கொன்று எவ்வித முரணுமின்றி தர்க்க இணைவுடையதாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு சரித்திரப்பிரதிக்குாிய பண்புகளை கொண்ட ஒரு நாவலாகும்.
ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை மிகவும் இலாவகமாகவும், கட்டிறுக்கமாகவும்,சுவாரசியமாகவும் வாசகனை கட்டிப் போடும் வகையில் கதை நகர்த்தப்பட்டுள்ளது. கதையின் ஓட்டத்திற்கேற்ப கதை பல்வேறு தளங்களுக்கு நகர்ந்த போதிலும் நிகழ்வுகளின் தொகுப்பமைவு கிஞ்சித்தும் பிசகாத வகையில் சிறந்த முன்வரைவுடையதாக அமையப் பெற்றுள்ளது. எதார்த்தத்தை மீறாத பாத்திரப்படைப்பும் மிகைப்படுத்தப்படாத காட்சிகளின் விவரிப்பும் வாசகனை கதையுடன் ஒன்றச்செய்கின்றது.
நாவலின் கதையானது நடைபெற்ற காலத்தில் நிலவிய சமூகப் பின்புலத்தில் இயங்கிய அரசியல் பொருளாதார பண்பாட்டு விழுமியங்களை வாசகருக்கு விளக்குவதற்கு போதுமான வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்நாவலின் ஆசிரியர் தீபச்செல்வன் ஒரு அழகான கவித்துவமிக்க மொழி நடையை கையாண்டு இருக்கிறார். அனேகமாக ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் இயற்கை பற்றி அவர் பேசுகின்ற மொழி ஒரு அழகிய கவிதை போலவே விாிகிறது. அது ஆசிரியரிற்குள்ளிருக்கும் இயற்கையின்மேல் காதல்கொண்ட ஒரு ரசிகமனதையும் அவாிற்குள்ளிருக்கும்அழகியல் உணர்வையும் எம்மை உணரச்செய்கிறது.
உதாரணமாக நாவலின் முதலாம் அத்தியாயத்தில் “சாளரத்தைக் கிளித்து நுழைந்த சூரிய ஒளியின் கரம் முகத்தை தட்டி துயில் எழுப்பியது. பனைகளின் முணுமுணுப்பு ஒரு பாடலாய் காதுகளை தழுவியது ஒரு மாற்றுத்திறனாளியின் எழுகையை போல...” என தொடரும் வரிகளில் வாசகனின் மனச் சாளரத்தைக் கிழித்துக்கொண்டு பயங்கரவாதி பயணப்படத் தொடங்கி விடுகிறான் வாசகனோ இவ் வசிய வாிகளில் சிக்கி விடுபட வழியின்றி செயலூக்கமிக்க வாசிப்புச் செயன்முறைக்கு ஆட்பட்டு தன்னையறியாலே பிரதியை கரங்களிலிருந்தும் கண்களிலிருந்தும் அகற்றமுடியாத போதைக்கு அடிமையாகிவிடுகிறான்.
நாவலில் உலவ விடப்பட்டிருக்கும் அனைத்து பாத்திரங்களும் ஏதோ ஒரு வகையில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களே. அவர்கள் ஒவ்வொருவாினதும் பின் கதைகள் பிரதான கதைக்கு எவ்விதத்திலும் தடங்கலோ உறுத்தலோ இன்றி சொல்லப்பட்டிருக்கும் விதம் சிறப்பாக இருப்பதுடன் ஒவ்வொரு ஈழத்தமிழனின் வாழ்விலும் போர் விட்டுச்சென்ற வடுக்களைத் திறந்து காட்டுவதாயுள்ளது.
கதை நடைபெறும் சமகாலத்தில் அல்லது சற்று முன்பின்னான காலத்தில் கிழக்கில் நிகழ்த்தப்பட்ட தென்னமரவாடிப்படுகொலை மற்றும் கிழக்கின் கட்டாய இடம்பெயர்ப்பு பற்றியும் தொட்டுச்செல்லும் இந்நாவல் அந்நிகழ்வுகள் பற்றிய விாிவான படைப்புகளிற்கான வெற்றிடத்தையும் சுட்டிச்செல்கிறது.
தமிழரின் வலிசுமந்த வாழ்வினை, விடுதலைக்கான அவர்களின் தியாகங்களை, அவர்களின் வீரத்தை, காதலை அழகாய் பதிவு செய்திருக்கும் இந்நாவல் ஈழத் தமிழர் ஒவ்வொருவராலும் வாசிக்கப்பட வேண்டியதாகும். முற்றாக தமிழரின் வலிசுமந்த வாழ்வினை, விடுதலைக்கான அவர்களின் தியாகங்களை, அவர்களின் வீரத்தை, காதலை அழகாய் பதிவு செய்திருக்கும் இந்நாவல் ஈழத் தமிழர் ஒவ்வொருவராலும் வாசிக்கப்பட வேண்டியதாகும். தீபச்செல்வனின் எழுத்துப்பணி தொடரட்டும்.
முரளிதரன்
திருகோணமலை, ஈழம்
நன்றி - மகாகவி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக